Monday, March 13, 2017

சரித்திரம் அவரின் சித்திரம் - 4

சரித்திரத்தின் பக்கங்களினூடாக செயல்பட்டு வருகிற நம் தேவன் தம் மேலான சித்தத்தின்படி, தேவ திட்டத்தின்படி ராஜாக்களை ஏற்படுத்தி, ராஜாக்களைக் கவிழ்த்துப் போடுகிற அவரின் செயல்பாடுகளை ஒவ்வொரு 'பேரரசு' பற்றியும் நாம் அறிந்து கொள்வதின் மூலம் அவதானித்து வருகிறோம்.

அவரின் செயல்திட்டம் பற்றின ஒரு தீர்க்கதரிசன அறிக்கைப் போல தானியேலின் புத்தகத்தில் நிறைய குறிப்புகள் உண்டு. பாபிலோனிய பேரரசன் நேபுகாத்நேச்சாரின் காலத்தில் வாழ்ந்த தானியேல் அதற்குப் பின்பு வரப்போகிற மேதிய - பெர்சிய ராஜாக்கள் பற்றியும், கிரேக்க ராஜாக்கள் பற்றியும் கூட துல்லியமான தீர்க்கதரிசனங்கள் கூறி இருக்கிறார்.

ஆனால் இதற்கு முன்பு பார்த்த அசீரிய, பாபிலோனிய, மேதிய, பெர்சிய ராஜாக்கள் வேதாகமத்தில் உள்ள அநேக சம்பவங்களோடு தொடர்புள்ளவர்களானதால் பலரும் இவர்களை அறிந்திருக்கக் கூடும். ஆனால் நாம் பார்க்கப்போகிற கிரேக்க ராஜாக்கள் பற்றி அப்படியாக நாம் பார்க்க முடியாது. மகா அலெக்ஸாண்டரைத் தவிர மற்ற ராஜாக்கள் பற்றி மறைமுகக் குறிப்புகள் உண்டு.

என்றாலும் தள்ளுபடி வேதாகமத்தில் உள்ள மக்கபேயர்கள் அலெக்ஸாண்டரைப் பற்றின குறிப்புகளுடன் தான் ஆரம்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மகா அலெக்ஸாண்டர் நமக்கு, நம் இந்திய மக்களுக்கே பரிச்சயமானவர்தான். இந்தியாவிற்குள் கால் பதித்த அவனைப் பற்றி பள்ளிப்பிள்ளைகளுக்குக் கூடத் தெரியும். ஆனால் இப்படிப் புகழ் பெறுகிறவனாய் மகா அலெக்சாண்டர் தோன்றப் போகிறான் என்று தானியேல் சொன்னதுதான் பலருக்கும் தெரியாத ஒன்று. மகா பெரிய பெர்சிய சாம்ராஜ்யம் வீழ்ந்து, கிரேக்க சாம்ராஜ்யம் வரப் போவது பற்றியும் வேதாகமக் குறிப்புகள் உண்டு.
எஸ்தர் புத்தகத்தில் வருகிறபடி 127 நாடுகளை ஆண்டு வந்த மகா ராஜாவான அகாஸ்வேருவின் தகப்பனான தரியு கி.மு. 490ல் மிகப்பெரிய ராணுவத்துடன் கிரேக்கத்தின் மேல் படையெடுத்தான். ஆனால் இந்தப் பெரிய படையை அத்தேனியர்களைக்(Athenians) கொண்ட சிறிய கிரேக்கர்களின் படை மராத்தன்(Marathon Valley) சமவெளியில் முறியடிக்கிறது. 
இந்தத் தோல்விக்கு பழிவாங்க அகாஸ்வேரு முயற்சிப்பது பற்றி தானியேல் 11: 2ல் குறிப்பு உண்டு. அகாஸ்வேருவின் மகா பெரிய ராணுவம் கி.மு. 480ல் மீண்டும் கிரேக்கத்திற்குள் நுழைய முயன்றது. தரை வழியில் முன்னேறி ஏதென்ஸை நெருங்கி அதன் கோட்டையை எரித்தாலும், கடற்பகுதியில் பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. பின் தோல்வி தரைப் பகுதியிலும் பெர்சியப் படைகளுக்குத் தொடர, அது பின் வாங்கிப் போயிற்று. இதை நாம் தானியேலின் தீர்க்கதரிசனப் படியே' என்று முடிக்கலாம், இந்த 'அதிசயமான' தோல்வியைப் பற்றி குறிக்கும் பொழுது...
மாரத்தன் போர்க்களத்தின் முதல்நிலை விளக்கப்படம் 
மாரத்தன் போர்க்களத்தின் இரண்டாம்நிலை  விளக்கப்படம் 
மட்டுமல்ல தானியேல் 11: 3ன்படி 'பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு தனக்கு இஷ்டமானபடி செய்வான்' என்ற குறிப்பின்படி அலெக்சாண்டர் உலகை வியக்க வைக்கிற, கிரேக்க பேரரசின் மகா ராஜாவாக வருகிறான்.
புகழ்பெற்ற யூத சரித்திர ஆசிரியர் ஜோசிபஸ்ஸின் குறிப்புகளின்படி கி.மு. 332ல் 'யூதேயா'வை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பிறகு எருசலேமில் நுழைந்திருந்த அவனிடம் அவன் இப்படி எழும்பப் போவது பற்றின தானியேலின் தீர்க்கதரிசன விவரங்களைக் காட்டின பொழுது வியந்து போன அவர், யூதர்களுக்கு நிறைய சலுகைகளை வழங்கினாராம்.

ஆனால் அலெக்சாண்டரின் முடிவு பற்றி, அதன்பின் நிகழ்கிற காரியங்கள் பற்றின தானியேலின் வார்த்தைகள் கூறப்பட்டதுண்டோ என்பது பற்றி நமக்குத் தெரியாது. ஆனால் தானியேல் 8:20-22ல், தானியேல் 11:4ல் சொல்லப்பட்டிருக்கிறபடியே அலெக்சாண்டருக்குப் பிறகு, கிரேக்க சாம்ராஜ்யம் அவனுடைய நேரடி குடும்ப வாரிசுகளுக்கு இல்லாதபடி, அவனின் நான்கு தளபதிகளுக்கிடையில் பிரிக்கப்பட்டுப் போனதை, நாம் உலக சரித்திரத்திலிருந்தும் அறிந்து கொள்கிறோம். இவர்களில் டோலமி (Ptolemy) வழியில் வந்த டோலமி ராஜாக்களும், செலுக்கஸ் (Seleucus) வழி வந்த செலுக்கஸ் ராஜாக்களும் நமது வேத சரித்திரத்தோடு தொடர்பு உடையவர்கள் எனலாம்.

நமது வேதாகமத்தில் மல்கியா தீர்க்கதரிசியின் காலத்திற்கும், புதிய ஏற்பாடு ஆரம்பிக்கிற காலத்திற்குமான இடைவெளியில் இருந்த சரித்திர காரியங்கள் இல்லை. இந்த காலகட்டத்தில் பிரதானமாய் ஆண்டு வந்த கிரேக்க சாம்ராஜ்யத்தின் ராஜாக்களான டோலமிகளும், செலுசிட்களும் கி.மு. முதலாம் நூற்றாண்டில் தங்கள் வலுவை இழக்கிறார்கள். கி.மு. 30ல் டோலமி ராஜாக்களிடமிருந்து எகிப்து பகுதியையும், கி.மு. 63ல் எருசலேமையும், செலுசிட் ராஜாக்களிடமிருந்து கி.மு. 63ல் சீரியா பகுதிகளையும் ரோமர்கள் கைப்பற்ற ரோம சாம்ராஜ்யம் ஆரம்பிக்கிறது எனலாம்.
ஆனால் இந்த காலகட்டத்திலும் தேவனுடைய செயல்பாடுகளை 'அப்போகிரிப்பா'வில் நாம் வைத்திருக்கிற மக்கபேயர்களின் புத்தகங்களின் வாயிலாக நாம் கண்டுணர முடியும். மக்கபேயர்களின் காலம் செலுசிட் அல்லது செலுக்கஸ் ராஜாக்களின் காலத்திற்குள் வருகிறது. (இதை அட்டவணையில் யோனாத்தான் (Jonathan Apphus  יונתן הוופסי), சிமியோன் (Simon Thassi  שמעון התרסי), யோவான் ஹைகிரேனஸ் (John Hyrcanus יוחנן הורקנוס)... காலங்களை பார்க்கையில் புரியலாம்). மக்கபேயர்களின் கலகம் ஆரம்பித்த கி.மு. 167ல் அரசாண்டவன் நான்காம் அந்தியோகஸ் அல்லது அந்தியோகஸ் எபிபேனஸ் (Antiochus IV Epiphanes) என்று அழைக்கப்படுகிற செலுசிட் ராஜாவாகும். இவன்தான் எருசலேம் தேவாலயத்திற்குள் பன்றியை பலியிட்டு தீட்டுப்படுத்தினவன். மக்கபேயர்களின் முதல் தலைவனான  (יהודה המכבי) யூதாஸ் மக்கபேயுஸ் (Judas Maccabeus) அப்போது தான் இந்த செலுசிட் ராஜாவுக்கு எதிராக எழும்பின யூத ஜனங்களை முன்னின்று நடத்தினவன். இதற்கு பின் வந்த பல மக்கபேய தலைவர்கள் கி.மு. 166லிருந்து கி.மு. 104 வரை போராடி வந்தனர் எனலாம். ஆனால் கி.மு. 128ல் இவர்கள் சீகேமைக் கைப்பற்றி ஓரளவு தங்கள் நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டனர்.
மல்கியாவில் 'மேசியா' பற்றின தீர்க்கதரிசனம் உண்டு... பல்வேறு சாம்ராஜ்யங்களின் நுகச்சுமைகளுக்கு உட்பட்ட ஜனங்கள், தங்களை விடுவிக்க வரப்போகிற 'மேசியா'வை எதிர்நோக்கி காத்திருக்கிற எதிர்பார்ப்புகள், ஏசாயாவிலிருந்து அநேக தீர்க்கதரிசிகள் 'மேசியா' பற்றி முன்னுரைத்தவைகளை மனதில் தேக்கிக் கொண்டு எழும்பின எதிர்பார்ப்புகள், யூத மக்களிடையே இருந்து வந்தது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. உதாரணத்திற்கு மக்கபேயர்களின் புரட்சியின் போது, அதன் தலைவனை மேசியாவோ என்று நினைக்க ஆரம்பித்ததாக நமக்கு குறிப்புகள் (இந்த நினைப்பு தவறாகிப் போனது நாம் அறிந்ததுதான்).
இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவெனில், தள்ளுபடி ஆகமங்களில் தானே இந்த குறிப்புகள் என்று நம்மில் பலர் நினைக்கக்கூடும்... என்பதாலோ என்னவோ தானியேல் 11ம் அதிகாரம் அநேகமாக இந்த கிரேக்க ராஜாக்கள் பற்றின தீர்க்கதரிசனங்கள் நிறைந்த பகுதி என்பது தான் விசேஷம். 

முதலாம் டோலமி தெற்கு பகுதியின் பலம் பொருந்திய ராஜாவாக, அதுவும் முதலாம் செலுக்கஸை விட (வட பகுதியின் ராஜா) இருப்பதிலிருந்து, அதில் மெசபொடேமியாவும், சிரியாவுமே இருப்பதிலிருந்து (தானியேல் 11: 5) இரண்டாம் டோலமி செலுசிட் ராஜாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இரண்டாம் அந்தியோகஸ்க்கு தன் மகள் பெர்னிசை திருமணம் செய்து வைக்க, இதில் ஆத்திரமான அந்தியோகஸின் பழைய மனைவி சதி செய்து ராஜாவையும், புதுமனைவியையும் கொலை செய்வதிலிருந்து, இதனால் ஆத்திரமடைந்த மூன்றாம் டோலமி தன் சகோதரி பெர்னிஸ் கொலை செய்யப்பட்டதற்குப் பழி வாங்க பழைய மனைவியின் மகனான இரண்டாம் செலுக்கஸ் உடன் போருக்குப் போய்... சண்டைகளுக்குப் பிறகு சமாதான ஒப்பந்தம் ஏற்படுவதில் இருந்து (தானியேல் 11: 7-9) இரண்டாம், மூன்றாம் செலுக்கஸ் ராஜாக்களிடையே ஏற்படுகிற அதிகார பகிர்வுகளிலிருந்து, மூன்றாவது அந்தியோகஸ் எகிப்துக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதிலிருந்து (தானியேல் 11: 10) ஆனால் தெற்கு பகுதியின் ராஜாவான நான்காம் டோலமி ராபியாவில் வெற்றிகரமாய் தாக்குவதிலிருந்து (தானியேல் 11: 11-12) பிறகு அந்தியோகஸ் காஜா பகுதியில் எகிப்தியர்களைத் தோற்கடித்து, பாலஸ்தீனத்தை வென்று பனியாஸ்ஐயும் பிடிப்பதிலிருந்து (தானியேல் 11: 13-16), எகிப்தை தன் கைக்குள் வைத்திருக்க தன் மகள் கிளியோபாட்ராவை (சீசர் - ஆண்டனி காலத்திய கிளியோபாட்ரா அல்ல!) ஐந்தாம் டோலமிக்கு திருமணம் செய்து கொடுத்தது, ஆனால் இது வெற்றி பெறாதது (தானியேல் 11: 17), அவன் கிரீஸை மற்றும் தீவுகளைப் பிடிக்க முயற்சிக்கிற பொழுது ரோம தளபதியால் தோற்கடிக்கப்படுவது, பின் திரும்பி வரும்பொழுது, தன் அரண்களை உறுதிப்படுத்த தன் கவனத்தைத் திரும்பும்பொழுது மரித்துப் போவது (தானியேல் 11: 18-19), நான்காம் செலுக்கஸ் தன் தீர்வைகளை சேர்க்க நியமிக்கப்பட்டவனாலேயே கொலை செய்யப்படுவது (தானியேல் 11: 20), அந்த ராஜாவுக்கு பதிலாக எழுந்த அந்தியோகஸ் எபிபேனஸ் சிம்மாசனத்திற்குரிய தன் சகோதரனை வஞ்சகமாய் தள்ளிவிட்டு அரசனாவது (தானியேல் 11: 21), அப்பொழுது பிரதான ஆசாரியனாக இருந்த ஒனியாஸ் (மூன்றாம்) வஞ்சகமாய் கொலை செய்து விடுவது... (தானியேல் 11: 22)...

இப்படி பட்டியலை அதிகமாக்கிக் கொண்டே போகிற அளவுக்கு குறிப்புகள் உள்ளன.

அநேகமாக நடக்கப்போகிற சரித்திரத்தை மறைமுகமான, புதிரான வார்த்தைகளால் தானியேல் தீர்க்கதரிசனம் உரைத்திருப்பது பிரமிக்க வைக்கிறது அல்லவா!

இந்த ராஜாக்களைப் பற்றின தகவல்களை உறுதிப்படுத்துவதைப் போல, பல அகழ்வு ஆராய்ச்சித் தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக டோலமி, செலுக்கஸ் ராஜாக்கள் காலத்தில் அடிக்கப்பட்ட நாணயங்கள். இவைகள் பலவற்றில் ராஜாக்களின் உருவங்களும், எழுத்துக்களும் உள்ளன. எல்லாமே கூறப்பட்ட சரித்திரம் எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பறைசாற்றுகின்றன.
இந்த டோலமி, செலுக்கஸ் ராஜாக்களின் இறுதி கட்டத்தில், மக்கபேயர்கள் சீகேமைக் கைப்பற்றி தங்கள் நிலையை ஓரளவு சீராக்கிக் கொள்கிறார்கள். கி.மு. 128ல்... பின் கி.மு. 63களில் ரோம சாம்ராஜ்யம் கால் பதிக்க ஆரம்பித்து விட்டது எனலாம்.
"கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாய் இருக்கிறது;..." (சங்கீதம் 19: 7)
-எட்வினா ஜோனஸ் 

கட்டுரைக்கு உதவின நூல்கள்:
1. Insight of the Scriptures - Vol 1 & Vol 2
2. The Bible and Archaeology by J.A.Thompson
3. The Living Word of the Old Testament by B.W.Anderson

Monday, November 21, 2016

சரித்திரம் அவரின் சித்திரம் - 3

நமது வேதாகமத்தில் எஸ்தரின் புத்தகத்தில் முதலாம் வசனம் பெர்சிய பேரரசு பற்றி இப்படிச் சொல்கிறது. 'இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள 127 நாடுகளையும் (!) அரசாண்ட அகாஸ்வேரு' என்று... இந்த ராஜா பெர்சியா மகாராஜாக்களில் ஒருவர் எனலாம்.

ஒரு விசேஷமான காரியம் என்னவெனில், முக்கியமான பெர்சிய ராஜாக்களான கோரேஸ், தரியு, அர்தசஷ்டாக்கள், அகாஸ்வேருக்கள் இவர்களுக்கு வேத சரித்திரத்தினூடாக இருக்கிற பங்கு கடந்த முறை பார்த்த அசீரிய ராஜாக்களிலிருந்து இவர்கள் மாறுபட்டவர்கள். ஆண்டவரை ஒரு சமயம் அறிய வேண்டிய பிரகாரமாய் அறியாமலிருந்தாலும், அவரின் மகத்துவமான திட்டத்தின் செயல்பாடுகளுக்கு இவர்கள் பயன்பட்ட விதம் வியக்க வைக்கிறது. எஸ்தர், நெகேமியா, எஸ்றா, ஏசாயா, தானியேல் புத்தகங்களில் இவர்களை சந்திக்க முடியும்.

அர்தசஷ்டாவும், அகாஸ்வேரும் நம்மில் பெரும்பாலானோருக்கு பரிச்சயமென்றாலும், தெரியாத விஷயம் என்னவெனில், இந்த இரு பெயர்களில் ஐந்து ராஜாக்கள் இருக்கிறார்கள் என்பது தான்!!!. வேதாகமத்தில் அவர்களை இப்படி வித்தியாசப்படுத்திக் காட்டவில்லை என்றாலும், சரித்திரப்படி அவர்கள் அப்படித்தான்.

நாம் இந்தப் பகுதியில் முக்கியமாகப் பார்க்கப்போகிற கோரேஸ்க்கு முன்பாக, இதைக் கொஞ்சம் பார்த்து விடலாம்.

எஸ்றா 4ம் அதிகாரத்தில் வருகிற அர்தசஷ்டாவும் (வச.7), எஸ்றா 7ம் அதிகாரத்தில் வருகிற அர்தசஷ்டாவும் (வச.1) வேறு வேறு ராஜாக்கள்.

அர்தசஷ்டா - I אַרְתַּחְשַׁשְׂתָּא (ARTAXERXES - I) எஸ்றா 4ம் அதிகாரத்தில் வருகிறவர். கோரேஸ்க்கு பின்பாக, தரியு ராஜாவுக்கு முன்பாகவும் ஆட்சியிலிருந்தவன். அதாவது கி.மு.465 முதல் 424 வரை, இவர் காலத்தில் சிலரின் பேச்சைக் கேட்டு எருசலேம் ஆலயம் கட்ட தடை விதிக்கப்பட்டதை இவருக்குப் பின் வந்த தரியு ராஜா நீக்குகிறார்.
அர்தசஷ்டா - II (ARTAXERXES - II LONGIMENUS) எஸ்றா 7ம் அதிகாரத்தில் மற்றும் நெகேமியா புத்தகத்திலும் வருகிறவர். (கி.மு.404 - 338) எஸ்றாவுக்கும், நெகேமியாவிற்கும் எருசலேம் போய் திரும்பி வர அனுமதித்த ஒரு நல்ல மகா ராஜா, எஸ்றாவின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றினார். (எஸ்றா 7: 6, 12, 23).
'அகாஸ்வேரு' என்ற பெயரில் மூன்று ராஜாக்கள் உண்டு. அகாஸ்வேரு - I தானியேல் 9: 1ல் வருகிறார். மேதியனான இந்த அகாஸ்வேரு, மேதியனான தரியு ராஜாவின் தந்தையாகும். அகாஸ்வேரு - II எஸ்றா 4: 6ல் வருகிற இவர் வேறு. கி.மு.529 முதல் 522 வரை ஆட்சியிலிருந்த இவர் கோரேஸின் மகனாக இருந்திருக்கலாம். அகாஸ்வேரு - III (AHASUERUS) இவர் தான் எஸ்தரில் நாம் பார்க்கிற மகா ராஜாவான அகாஸ்வேரு. தானியேல் 11: 2ல் உள்ள தீர்க்கதரிசனப்படி - அதில் வருகிற 4வது ராஜாவாக இவர் இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சரி. எதற்கு இந்த விஷயங்களை நாம் தெரிந்து கொண்டு என்னவாகப் போகிறது என்று பலர் நினைக்கவும் கூடும். இவர்கள் வேறு வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று புரிந்துகொள்ளும் பொழுது தான், நாம் எஸ்ரா, நெகேமியா, எஸ்தர் புத்தகங்களை சரியானபடி விளங்கிக்கொள்ள இயலும்.
இந்த பெர்சிய ராஜாக்களில் வெகு சுவாரஸ்யமான கதையைக் கொண்டவர் கோரேஸ் மகாராஜா (Cyrus) பாபிலோனிய ராஜாவான நேபுகாத்நேச்சார் மூலமாக, வணங்கா கழுத்துள்ள தம் ஜனங்களுக்கு பாடம் கற்றத் தந்தார் ஆண்டவர். அவன் தேவாலயத்தைக் கொள்ளையிட்டு, தானியேல் முதலான யூத இளைஞர்களை சிறைப்பிடித்து, பாபிலோனுக்கு கொண்டுபோக அனுமதித்த ஆண்டவர், இந்த பெர்சிய ராஜாவான கோரேஸ் காலத்தில் யூத ஜனங்களை மறுபடி எருசலேமிற்கு திரும்பப் பண்ணுவதைப் பார்க்கலாம்.
யூத ஜனங்களுக்கு நிகழ்ந்த இந்த 70 வருஷ நிகழ்வுகளில், இரு வேறு காலகட்டத்தில் வாழ்ந்த இரு வேறு சாம்ராஜ்யத்தின் இரு மகாராஜாக்களை, ஒரு வகையில் சதுரங்கத்தில் காய் நகர்த்துகிறதைப் போல, ஆண்டவர் தம் மகத்தான சித்தத்தின்படி எப்படி பயன்படுத்துகிறார் பாருங்கள்.

நல்லது, யார் இந்த கோரேஸ் ராஜா?
பெர்சியப் பேரரசின் முதல் முக்கியமான முதல் ராஜாவான இவர் கி.மு.539ல் தான் உலக சரித்திரத்தில் தன் முத்திரையைப் பதித்தான் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த கி.மு.539 தான் மகா பாபிலோனிய அரசை ஒரே நாளில் கோரேஸ் வீழ்த்தின வருடம். ஆனால் இப்படி ஒரு ராஜா வரப் போகிறான் என்று, 'ஆண்டவரைப் பற்றி ஏதும்' அறிந்திராத இந்த ராஜாவை முன்னறிவித்தது யார் தெரியுமா? கொஞ்சம் குறைய கோரேஸ்க்கு 150 வருஷங்களுக்கு முன்பிருந்த ஏசாயா தீர்க்கதரிசி தான்.

"...நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்." (ஏசாயா 45: 4)

"கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்." (ஏசாயா 44: 28)

இப்படி இந்த ராஜாவினுடைய பெயரை அத்தனை வருஷங்களுக்கு முன்பாக குறிப்பிட்டது மட்டுமல்ல, அவன் செய்யப் போகிற காரியங்களைப் பற்றியும் முன்னறிவிக்கிறார் ஏசாயா.

ஏசாயா தீர்க்கனின் காலம் கி.மு.740 முதல் 680 வரை எனப்படுகிறது. இந்த நாட்களில் பாபிலோனிய பேரரசு கூட உருவாகவில்லை. ஏசாயாவிற்கு பின்பே அது ஆரம்பிக்கிறது (கி.மு.645 முதல் 539). ஆனால் அதற்கு முன்பாகவே அந்த பாபிலோனிய பேரரசை வீழ்த்துகிற கோரேஸ் பற்றின குறிப்புகள் எத்தனை ஆச்சர்யம்!

நேபுகாத்நேச்சாரின் காலத்தை பாபிலோனிய பேரரசின் உன்னதமான காலங்கள் ஆரம்பிக்கிற வருஷங்களாக எடுத்துக் கொண்டால் கி.மு.624லிருந்து அதன் வல்லமை, பராக்கிரமம் அதிகரித்துக் கொண்டே போனது. பல வகைகளிலும் புகழ் பெற்றது. குறிப்பாக ராணுவ பலம். தலைநகரமான பாபிலோன், முக்கிய நதியான யூப்பிரட்டீஸின் நதியோரம் அமைந்ததொன்றாகும்.
பாபிலோனிய ராணுவ பிரதானிகள் இந்த நகரத்தின் கோட்டை அரண்களை எவ்விதமாக வடிவமைத்திருந்தார்கள் எனில், ஓடிக் கொண்டிருக்கும் நதியையே கோட்டையைச் சுற்றி இருக்கிற அகழியைப் போல அமையச் செய்திருந்தார்கள்.
மட்டுமல்ல, நதியின் ஒரு கால்வாய் நகருக்குள்ளும் சென்றது. இன்னும் பெரிய வலுவான வெண்கலக் கதவுகளும் அரண்களில் இருந்தன. இந்த நதி 'அகழி' அமைப்பே எவரும் பாபிலோனைத் தாக்க நினைத்துக் கூட பார்த்துவிட முடியாதபடி மாபெரும் பாதுகாப்பு அரணாக இருந்தது. நதியை ஒட்டின கோட்டைச் சுவரின் அகலம் 21 அடிகளுக்கும் அதிகமாகும். இதைத் தாண்டி, இன்னொரு சுற்று மதில் சுவரும் இருந்தது.
எவரும் நெருங்க யோசிக்கக்கூடத் தயங்குகிற இந்த மகா பிரமாண்டத்தினால் தான் நேபுகாத்நேச்சார் தானியேல் 4: 30ல் 'இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா?' என்கிறான்.

எனினும், கோரேஸ் ராஜா, லிடியா, சர்தை போன்ற ராஜ்யங்களை ஜெயித்த பிறகு, இந்த மாபெரும் பாபிலோனுக்கு குறி வைக்கிறான். அந்நேரம் பாபிலோனின் மகா ராஜாவாக இருந்தவன் நேபோனிடஸ். (இவனுடைய மகனான பெல்ஷாத்சார், உடன் ஆளுநனைப் போல, அரண்மனையில் இருந்தான். தானியேல் 5: 1) இந்த பாபிலோனை வெல்ல கோரேஸ் மேற்கொண்ட உத்தி மிகப் பிரசித்தமானது.

பாபிலோனுக்கு வெளிப்புறத்தில், அதற்கு எதிரே ஆனால் சற்றுக் கீழாக இருந்த செயற்கையான ஏரி ராணி நிட்டோகிரிஸ் (Nitocris) ஏரியில், போகும்படியாக, கோட்டையைச் சுற்றி இந்த நதி அகழியில், ஒரே நேரத்தில் ஏராளமான கால்வாய்களை வெட்டி, நதியோட்டத்தை திருப்பிவிட, மிகக் குறைந்து போன ஆழத்தில், கோரேஸின் படைகள் எளிதாகக் கடந்தன. இதில் சுவாரஸ்யம் என்னவெனில், தங்களின் பாதுகாப்பு அரணைப் பற்றின மிதமிஞ்சிய நம்பிக்கையில் அரண்களிலிருந்த மாபெரும் கதவுகளைக் கூட சரியாக அடைக்காதிருந்தார்களாம் பாபிலோனியப் படையினர். நிலைமைகள் கட்டுக்கு மீற முக்கியமான ஒரு பாபிலோனிய தளபதி கட்சி மாற, வெகு சுலபமாக ஒரே நாளில் பாபிலோனிய அரசு வீழ்ந்தது. கோரேஸின் ஆளான மேதியனான தரியு, பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டு விட ராஜாவானான்.

பின்பு இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை பல சரித்திர ஆசிரியர்களும் பதிவு செய்துள்ளனர். என்றாலும், இதில் குறிப்பிடத்தக்க காரியம் என்னவெனில், இப்படி நடக்கப் போவது பற்றின குறிப்புகள் ஏசாயாவிலும் (46: 10, 11), எரேமியாவிலும் (50: 38 / 51: 30 - 32) முன்பாகவே எழுதி வைக்கப் பட்டிருந்ததுதான். 'மர்டக்' என்ற பாபிலோனிய தெய்வமொன்றை வணங்கி வந்த கோரேஸ்க்கு, பாபிலோன் வீழ்ந்த பிறகும், புதிய அரசில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த தானியேல் தீர்க்கதரிசி, கோரேஸிடமும் மிகுந்த செல்வாக்கு உடையவராய் இருந்தார் (தானியேல் 6: 28).
ஒரு வேளை , கோரேஸிடம், தானியேல் எப்படி கோரேஸ் பிறப்பதற்கு வெகு வருஷங்களுக்கு முன்பாகவே, அது பற்றி ஏசாயா முன்னறிவித்தார் என்றும், அவர் ஜெயிக்கப் போவது பற்றின ஏசாயா மற்றும் எரேமியாவின் குறிப்புகளையும்கூட சொல்லி இருந்திருக்கக் கூடும். விளைவு...

கோரேஸின் இந்த ஆச்சர்யமான அறிக்கை, அதுவும் அவனுடைய முதலாம் வருஷத்திலேயே!
"பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்." 
(2நாளாகமம் 36: 22 & எஸ்றா 1:2) என்கிறான்.

(இந்த இடத்தில் ஏசாயா 44: 28ஐ நினைவுகூர்வது நல்லது).

கோரேஸு டைய இந்த அற்புதமான அறிக்கை எஸ்றா 1: 2-4ல் உண்டு. மட்டுமல்ல, பாபிலோன் ராஜா எடுத்துக் கொண்டு போன தேவாலயத்து பாத்திரங்களை எல்லாம் திரும்பக் கொடுக்கிறான். ஒப்படைத்தது யாரிடம் தெரியுமா?

பாபிலோனுக்கு சிறைப்பிடித்துக் கொண்டு போகப்பட்ட யூதாவின் ராஜாவான யோயாக்கீனுடைய மகனாகிய சேஸ்பாரிடத்தில் (SHESHBAZZAR שֵׁשְׁבַּצַּ֔ר ) தான். இதன் விசேஷம் என்னவெனில் தலைமைப் பொறுப்பு மீண்டுமாக தாவீதின் வம்சாவளியினரான ஒருவரிடமே சேர்வது தான். இவரைத் தொடர்கிற செருபாபேலுமே (Zerubbabel זְרֻבָּבֶל ) இந்த தாவீதின் வழியினனாக இருப்பதைக் கவனிக்கலாம்.
இந்த நேரத்தில் சிலருக்கு இன்னொரு சந்தேகம் எழ வாய்ப்புண்டு. கண்டெடுக்கப்பட்ட கோரேஸின் உருளையில் (Cyrus Cylinder) உள்ள விவரங்கள் எதிர்மாறாக இருக்கிறதே, பெற்ற எல்லா வெற்றிகளுக்கும் மர்டுக் தேவனை சிலாகித்து இருப்பதாக அல்லவா சொல்கிறார்கள் என்று கேட்கவும்கூடும்.

சத்திய வேதத்தில், கோரேஸின் வார்த்தைகள் பற்றி இத்தனை தீர்க்கமாய், தெளிவாய் இருந்தும், கோரேஸின் உருளையில் அப்படி இருக்கக் காரணம், அதை உருவாக்கின பாபிலோனிய பூசாரிகளின் பிரச்சாரம் என்கிறார் எமில். ஜி. கிரிச் (Emil G. Hirsch) என்கிற ஆராய்ச்சியாளர்.
ஏனெனில் கோரேஸுடனான போரில் ஜெயிப்பதற்காக நெபோனிடிஸ், பாபிலோனின் எல்லா தெய்வங்களையும் சேர்ந்து தன்னிடம் வைத்துக் கொண்டிருந்தும், தோற்றுப்போய் விட, இதை ஈடுகட்ட கோரேஸின் வெற்றிக்கு 'மர்டுக்' தேவனை பிரதானப்படுத்துகிற முயற்சி தான் இது என்கிறார் இவர். யூத ஜனங்களைத் திரும்ப அனுப்ப கோரேஸ் பிறப்பித்த அரசாணை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அதன் விவரங்கள் உண்மையைக் கோடிட்டுக்காட்டக் கூடும் (எஸ்றா 6: 3 - 5). இந்த கோரேஸ் ராஜாவின் கல்லறை இன்றைக்கும் பாசர்கடேயில் உண்டு. அவனைப் பற்றின விசேஷமான வாசகங்களோடு!
"உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன்..." (சங்கீதம் 45: 17)

-எட்வினா ஜோனஸ் 
கட்டுரைக்கு உதவின நூல்கள்:
1. Insight of the Scriptures - Vol 1 & Vol 2
2. The Bible and Archaeology by J.A.Thompson
3. The Living Word of the Old Testament by B.W.Anderson